வவுனியா நகர சபை உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் படங்களை பதாதைகளாக்கி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து நீண்ட நாட்களாக அமைக்கப்பட்டிருந்தது.

இப்பதாதைகள் நேற்று இரவு நகரசபை தொழிலாளர்களினால் அவர்களது வாகனங்களில் அகற்றும் பணிகள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நகரசபை உறுப்பினர் அடங்கியவர்களினால் இப்பதாதைகளை அகற்றுவதற்கு ஊழியர்களிற்கு இடையூறு விளைவித்திருந்ததுடன் அநாகரியமான முறையிலும் நடந்து கொண்டனர். இவர்களின் இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரசபை வாயிலிற்கு முன் இடம்பெற்ற இப்போராட்டத்தின் போது நகரசபை உத்தியோகத்தர்களினால் எங்கள் கடமைகளை சரியாக செய்ய அனுமதிக்கவும்,

நகரசபை தலைவரை அவமதிக்காதே,

அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு அச்சுறுத்தாதீர்கள்,

நகரசபை உறுப்பினரே நகரசபை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நகரசபை தலைவர் இ.கௌதமன் நேற்று எனது உத்தரவிற்கு இணங்க வருமானபகுதி உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அனுமதியற்ற பதாதைகளை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபடும் போது கட்சி சார்ந்த சிலரினால் இச்செயற்பாட்டினை மேற்கொள்ளவதற்கு உத்தியோகத்தர்களிற்கு தடை செய்ததுடன், முரண்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நகரசபை ஊழியர்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இவ்முரண்பாட்டில் ஈடுபட்ட கட்சி சார்ந்த நபர்கள் வந்து 12 மணிக்குள் வந்து அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு அவர்களினால் மன்னிப்பு கோரப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படுவதோடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்தார்.

இதேவேளை இன்று மதியம் 01.00 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாஸ மற்றும் நகரசபை உறுப்பினர் ஜானக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் நகரசபை தலைவர், செயலாளர் மற்றும் ஊழியர்களுடன் ஒர் சந்திப்பை மேற்கொண்டதுடன் இச்செயற்பாட்டிற்கு தமது மன்னிப்பினையும் கோரியிருந்தமை அடுத்து வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.