ஞானசார தேரரை சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுதலை செய்ய வேண்டும்! இலங்கை இந்து சம்மேளனம்

Report Print Murali Murali in சமூகம்
288Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்பதாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை இந்து சம்மேளனம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை குருக்கள் பேரவை என்பன இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்விடயத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இந்நாட்டில் வாழும் இந்துக்களின் சார்பாக இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

கடந்த காலங்களில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களாலும், மத அமைப்புக்களாலும் இந்துக்கள் வேறு மதங்களுக்கு மாற்றப்படுகின்ற அச்சுறுத்தல் நிலையொன்று காணப்பட்டது.

அவ்வேளையில் ஞானசார தேரர் நாடு முழுவதிலும் மத மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரங்களால் விழிப்புணர்வடைந்த இந்துக்கள் மதமாற்ற முயற்சிகளில் இருந்து தம்மைக் காத்துக்கொண்டனர்.

அதேபோன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் பெரிதும் விழிப்புணர்வு பெற்றனர். ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைப் புரிந்தவர் அல்ல.

நாட்டிற்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவராவார். அத்தகைய ஒருவரே தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். நாட்டிற்காக போராடியதாலேயே அவருக்கு இன்று இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு வழங்கி ஞானசார தேரரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.