அமெரிக்காவில் சிக்கப் போகும் மஹிந்தவின் மைத்துனர்! 20 வருட சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான ஜாலிய விக்ரமசூரியவுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் ஜாலிய விக்ரமசூரிய மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை கொலம்பியா நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

இதன்போது20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக மைத்துனரான ஜாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள இவர் அங்கு பதவியில் இருந்த காலத்தில் பணச்சலவை, நிதி மோசடி, மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறியமை குறித்து அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பணச்சலவை சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும், நிதிமோசடி தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளும், கடந்த 2018 மேமாதம் அமெரிக்கா வந்த போது குடிவரவுத் திணைக்களத்துக்கு தவறான வழங்கினார் என ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எவ்பிஐ அதிகாரிகளின் நீண்ட புலனாய்வுக்குப் பின்னர் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கு விரைவுபடுத்தப்பட்டது. ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து, அவருக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் புதிய இராஜதந்திரப் பதவிகளைக் கொடுத்தால், இந்த வழக்கில் சிக்கல் ஏற்படும் என்றும் கருதப்பட்டதால், விரைவாக வழக்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியில் முடிந்த நிலையில் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான வழக்கு எந்தச் சிக்கலுமின்றி, அமெரிக்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.