700 ரூபாய் அடிப்படை சம்பளம் என்பது ஒரு கண் துடைப்பு - பொகவந்தலாவையில் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள் இன்று 700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதை ஆட்சேபிக்கின்றோம் என தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் பொகவந்தலாவ, ஹட்டன் பிரதான வீதியை மறித்து செல்வகந்தை பிரதேசத்தில் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் கெம்பியன், பெற்றசோ, செல்வகந்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு கோஷங்களை வெளியிட்டிருந்தனர்.

இதன்போது ஹட்டன் தொடக்கம் பலாங்கொடை வரையிலான பிரதான வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக நாளை கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் என வலியுறுத்தியேஆர்ப்பாட்டகாரர்கள் வாக்குறுதி வழங்கியவாறு ஆயிரம் ரூபாய் சம்பளமே எமக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவை பெற்றுத் தருவேன் என தீக்குளிக்க முற்பட்ட அமைச்சரும், ஆயிரம் ரூபாவை வலியுறுத்திய தொண்டமானும் கூட இன்று 700 ரூபாய் அதிகபடியான சம்பளம் எனவும், 40 வீத சம்பள உயர்வு வரலாறு காணாத ரீதியில் இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்து ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர எத்தனிக்கின்றனர்.

ஆனால் இன்றைய வாழ்க்கை செலவு அடிப்படையில் 700 ரூபாய் அடிப்படை சம்பளம் என்பது ஒரு கண் துடைப்பு விடயமாகும். இந்த விடயத்தில் அரசாங்க தரப்பு பக்கத்திலும் தொழிலாளர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை வழங்கியுள்ள நிலையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம் என தொழிலாளர்கள் கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers