ஞாயிறுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை! விரைவில் சட்ட மூலம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடாத்துவதை தடை செய்வதற்கான சட்ட மூலம் ஒன்று விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.

இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் அறநெறி பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அதிகளவில் கலந்து கொள்ள செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா இந்து கலாசார பேரவையின் பொங்கல் விழா நேற்று நுவரெலியா ஹாவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கோலப்போட்டி, சுவையான பொங்கல் வைத்தல் போட்டி, மாலை கட்டுதல் போட்டி என பல்வேறு போட்டிகளும் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.

நிகழ்வுகள் அனைத்தும் நுவரெலியா இந்து கலாசார பேரவையின் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகர சபை உறுப்பினருமான ஆர்.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி, மாநகர சபை உறுப்பினர்களான விஸ்னுவரதன், கேதீஸ், திருமதி.சிவரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு பேசிய விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் ,

மலையகத்தில் இருக்கின்ற இது போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக தமிழ் கலாசராத்தை பிரதிபலிக்கின்ற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது மிகவும் இன்றியமையாத ஒரு விடயமாகும்.

அதற்கு காரணம் எங்களுடைய எதிர்கால சந்ததியினருக்கு எமது கலை கலாசாரத்தை கொண்டு சேர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்த பொது அமைப்புகளுக்கு இருக்கின்றது. எனவே அவ்வாறான அமைப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு எங்களுடைய அமைச்சு தயாராக இருக்கின்றது.

அண்மையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் விசேட கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நானும் அமைச்சர் மனோ கணேசனும் கலந்து கொண்டோம்.

எங்களை தவிர வேறு மதங்களை பிரதிநதித்துவம் செய்கின்ற வகையில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டமானது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்திற்கு மிக விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடாத்துவதை தடை செய்யும் வகையில் சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டத்தில் கலந்து கண்ட அனைவரும் ஏகமனதாக தீர்மானித்தனர்.

ஏனென்றால் அந்தந்த மதத்தை பிரதி பலிக்கின்ற வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் விசேட மத சார்பான வகுப்புகள் ஆலயங்களிலும் பள்ளிவாசல்களிலும் விகாரைகளிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடைபெற்று வருகின்றது.

இந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்று வருவது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே. அதற்கு காரணம் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகின்ற தனியார் வகுப்புகளே.கட்டாயமாக இந்த வகுப்புகளுக்கு மாணவரகள் சென்று வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதன் மூலமாகவே எங்களுடைய எதிர்காலத்தை சமூகத்தை சிறந்த ஒரு சமூகமாக உருவாக்க முடியும். எனவே அனைவரும் இணைந்து இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...