ஒரு சில முஸ்ஸிம்கள் செய்யும் தவறினால் ஒட்டுமொத்த இனத்திற்கும் பாதிப்பு! அமைச்சர் ரிஷாட்

Report Print Ashik in சமூகம்

முஸ்லிம்களில் ஒரு சிலர் மேற்கொள்ளும் சிறிய நடவடிக்கைகளை, ஐ.எஸ் பயங்கர வாதத்துடன் சம்பந்தப்படுத்தி, அவர்களின் இருப்பை இல்லாமற் செய்யும் பயங்கரமான சதியொன்று அரங்கேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அண்மைக்காலமாக உலக நாடுகளில் பயங்கரமான அச்சுறுத்தல் நிலவி வருகின்றது. 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில் ஏறத்தாழ 90% நாடுகளில் இன்று நிம்மதியான சூழல் இல்லை. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும் , அவலக்குரல்களுமே தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றன.

இரத்த களரிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு சூழல் சிறுபான்மையாக வாழும் நமது நாட்டிலும் தற்போது ஊடுருவியுள்ளது. இஸ்லாமியர்களை இல்லாமலாக்குவதற்காகவே சதிகாரர்கள் இவ்வாறான கைங்கரியங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

நமது மார்க்கத்தை பற்றி தவறாகவும் ஆபத்தானதாகவும் இன்று மற்றைய சமூகங்கள் பார்க்குமளவிற்கு நாளுக்கு நாள் இடம்பெறும் சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் முஸ்லிம்களில் ஒருசிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழு சமூகத்தையும் பாதிப்படைய செய்வதோடு, ஒட்டு மொத்தமான இழுக்கையும் ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் எங்களுடைய மார்க்கத்தின் நல்ல பண்புகளை அறியும் அளவிற்கு நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

வாழ்க்கையிலே ஒவ்வொரு விடயங்களிலும் நேர்மையாக இருக்க வேண்டும். தடை செய்தவற்றையும் ஹராமானவற்றையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். முஸ்லிம் இவ்வாறான நல்லபண்புடன் தான் இருப்பான்.

என்ற செய்தியை பிற மக்கள் அறியும் விதத்திலே நமது செயற்பாடுகள் அமையுமானால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கலாம். முஸ்லிம்களில் ஒரு சிலரின் தவறான செயற்பாடுகளினால் இன்று இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாமிய சட்டத்தை பற்றியும் பிழையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எமது மூதாதையர்கள் நமக்குப் பெற்றுத்தந்த முஸ்லிம் திருமண விவகாரத்துச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த வேண்டுமென அண்மைக்காலமாக சில முஸ்லிம் பெண்கள் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளில் இஸ்லாத்திற்கு மாற்றமான சில ஆலோசனைகளும் இருக்கின்றன.

ஆனால் அவர்களிடம் இவற்றைச்சுட்டிக்காட்டினால் அதற்கான காரணத்தையும் கற்பிக்கின்றார்கள் . எப்படியென்றால், ஒரு சில பெண்களின் கணவன்மார் தமது குடும்ப வாழ்வில் நடந்து கொள்ளும் முறை கேடான நடவடிக்கைகளை அத்தாட்சியாக காட்டி, பெண்களுக்கு நீதி கேட்கின்றார்கள்.

அந்நிய அரசியல்வாதிகளிடம் இந்த பிரச்சினையை கூறி, சமூகத்தை வெட்கி தலை குனிய வைக்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் நாம் வழிசமைத்து விடக்கூடாது.

இஸ்லாமியச் சட்டங்களை எல்லோரும் விமர்சிக்கும் நிலை இன்று இந்த நாட்டிற்கு வந்துள்ளதுள்ளமை வேதனையானது.

இன்று சிலர் முஸ்லிம்களை வேண்டுமென்றே வன்முறைக்கு இழுக்கும் வியூகங்களில் இறங்கியுள்ளனர்.

அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற நோக்கிலும் சில அரசியல்வாதிகள் முஸ்லிம்களை பற்றி இல்லாத பொல்லாத கதைகளை கட்டி வருகின்றனர்.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் காட்ட வேண்டிய தேவை சில அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எழுந்துள்ளது.

இவ்வாறான இனவாதிகளின் தேவைகளுக்கு தீனி போடும் வகையில் பெரும்பான்மை ஊடகங்களும் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers