தொழிற்சங்கங்களின் சந்தாவை நிறுத்துமாறு மலையக இந்து குருமார் ஒன்றியம் கோரிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் என்ற சம்பள உயர்வை நிறைவேற்ற தவறிய தொழிற்சங்கங்களின் சந்தாவை நிறுத்துமாறு இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தொழிலாளர்களை வலியுறுத்தியுள்ளது.

சம்பளம் உடன்படிக்கை தொடர்பில் செய்து கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக தெரிவித்திருக்கும் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ. வேலு சுரேஷ் சர்மா இந்த வலியுறுத்தலை தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஹட்டனில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான தோட்ட தொழிலாளர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்.

நாளாந்த வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்லமுடியாத நிலையில் வாழும் இத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான சம்பளத்தையே அடிப்படையாக பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.

மாறாக இம்மக்களை ஏமாற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட்டு இணைந்து குறைவான தொகையாக 855 ரூபாவை சம்பளமாக பெற்றுக் கொடுத்து அதற்கு இன்று கையொப்பம் இடுவது துரோகமான செயலாகும்.

இந்த தொழிலாளர்களின் நிலை கண்டு இந்த நாட்டின் இளைஞர்கள், பல்லைகழக மாணவர்கள், பொது அமைப்புகள் இவர்களுடன் இந்து குருமார் ஒன்றியம், இந்துமா சபை என பல போராட்டங்களை முன்னெடுத்தமையால் குறித்த சம்பள தொகையேனும் எட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய இவர் இது தொழிற்சங்கங்களாலும், அரசியல்வாதிகளினாலும் பெற்றுக்கொடுத்த சம்பளமாக கருத முடியாது.

குறைவான சம்பளத்திற்கு கையொப்பம் இடுவதை வன்மையாக கண்டிக்கும் எமது ஒன்றியம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முன்வராத பட்சத்தில் தொழிற்சங்கங்களுக்கு தாரைவார்க்கும் சந்தாவை நிறுத்தி விட்டு சட்ட ரீதியாக போராடுவதற்கு முன்வந்தால் அதில் ஏற்படும் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க ஒன்றியம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இன்று குற்றவாளி என கருதப்பட்ட ஞானசேர தேரரை விடுவிக்கும் படி இந்து அமைப்பு என பெயர் சூட்டிக்கொண்டு சிலர் முன்வருகின்றார்கள்.

அதேநேரத்தில் சிறைகளில் வாழும் தமிழ் கைதிகளை விடுவிக்க இவர்கள் முன்வந்துள்ளார்களா அல்லது இந்த நாட்டில் தலைவிரித்தாடும் போதைபொருளை ஒழிப்பதற்கு முன்வந்துள்ளார்களா இல்லை.

மாறாக இந்து குருமார் என்ற பெயரை கொண்டு இயங்கும் அவர்கள் தமிழ் உணர்வுடன் செயல்படும் என தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் அரசின் அழுத்தம் முறையாக கிடைக்கவில்லை. மாறாக போராட்டங்களும் உண்ணாவிரதங்களுமே இதற்கு கைகொடுத்து உதவியுள்ளது.

நாடாளுமன்றத்தின் ஊடாக ஆயிரம் ரூபாய்க்கு பாரிய அழுத்தம் கொடுத்திருந்தால் ஏமாற்றும் வகையிலான குறைவான சம்பளத்திற்கு இவர்கள் ஒப்பம் இட மாட்டார்கள்.

கூட்டு சேர்ந்து மக்களை முட்டாலாக்கும் செயலுக்கு மலையக தமிழ் அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் செயற்படுவது போல அமைச்சர் நவீன் திஸநாயாக்கவும் செயல்பட்டுள்ளார்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க நிலுவை தொகையை வழங்க 150 மில்லியன் ஒதுக்க முடியுமே என்றால் இதே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் திகாம்பரம் மற்றும் வடிவேல் சுரேஷ், ஆறுமுகன் தொண்டமான், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தொழிலாளர்களின் சம்பளத்தை வரவு செலவு திட்டத்தின் ஊடாக உயர்த்திருக்க முடியாது.

அல்லது மானியமாக ஒரு தொகையை இவர்களுக்கு ஏன் வழங்கியிருக்க முடியாது என கேள்வி எழுப்பினார்.

மக்களை அடிமையாக்கி அவர்களின் உழைப்பில் அரசியல் நடத்தும் இவர்கள் மலையக தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

எனவே 700 ரூபா சம்பளத்திற்கு கையொப்பம் இடுவதை வன்மையாக கண்டிக்கும் எமது ஒன்றியம் இதற்கு எதிராக மக்கள் போராட முன்வருவார்களேயானால் அதில் ஏற்படும் சட்ட சிக்கல்களுக்கு இலவசமாக உதவுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் எனவும், துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.