பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 750 ரூபாய் சம்பள உயர்வு! எதிர்க்கும் தொழிற்சங்கம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய கூட்டு உடன்படிக்கையின் ஊடாக கைச்சாத்திடப்படவுள்ள 750 ரூபாய் சம்பள உயர்வை தொழிற்சங்கம் ஒன்று எதிர்த்துள்ளது.

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இந்த சம்பள உயர்வு தொடர்பில் நேரடி விவாதம் ஒன்றுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஹட்டனில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி காரியாலயத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பின் சங்கத்தின் தலைவர் கிஷ்ணன் செல்வராஜ் இதனை தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15ம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகியது. அதற்கு முன்பதாகவே அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் புதிய கூட்டு உடன்படிக்கையின் போது ஆயிரம் ரூபாய்க்கு அதிகபட்சமான சம்பள உயர்வை வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், அரசாங்கத்திற்கும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும், அழுத்தங்களுக்கு மத்தியிலும் பல கட்ட பேச்சுவார்த்தையின் பின் அடிப்படை சம்பளமாக இருந்த 500 ரூபாய்க்கு மேலதிகமாக தற்போது 750 ரூபாவை உயர்த்தி புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர்.

கடந்த உடன்படிக்கையில் 730 ரூபாய் மொத்த சம்பளமாக இருந்த போதிலும் தற்போது 855 ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுவதால் கடந்த காலங்களில் உள்வாங்கப்பட்டிருந்த மேலதிக கொடுப்பனவுகள் அகற்றி 20 ரூபாய் அதிகமான சம்பளத்திற்கு கையொப்பம் இட காத்திருக்கின்றனர்.

இதனை எமது தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. காலம் காலமாக கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபடும் மலையக தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர்களை ஏமாற்றும் வித்தை தொடர்ந்து கொண்டே வருகின்றது.

தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்த ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க மலையக மக்கள் தொடர்பில் அவர்களின் வாழ்க்கை நிலையை பேசும் போது மலையக தலைவர்கள் மௌனிகளாக இருந்தனர்.

இதற்கு காரணம் கடந்த காலம் முதல் இவர்கள் அரசின் பங்காளிகளாக செயற்படுவதையே ஆகும். நாட்டில் மாறி மாறி வரும் அரசுகளின் கையேந்திகளாக இருக்கும் இவர்களுக்கு தொழிலாளர்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று தெரியும்.

அந்தவகையில் ஆயிரம் ரூபாவை கோரிக்கையாக வைத்து 750 ரூபாவை பெற்றுக்கொடுப்பார்களே ஆனால் இவர்கள் தொழிலாளர்களின் தலைவர்கள் அல்ல. துரோகிகள் இதனூடாக மலையக சமூகம் இவர்களை அடையாளம் கண்டு விளங்கிக்கொள்ள வேண்டும்.

அத்தோடு தொழிலாளர்கள் மீண்டும் காட்டி கொடுப்புக்கு உள்ளாகி உள்ள புதிய உடன்படிக்கையில் இவர்கள் கையொப்பம் இட கூடாது என வலியுறுத்துகின்றோம்.

ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் எம்.பி பதவியை தூக்கி எறிவதாக ஆறுமுகன் தொண்டமானும், ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க தீ குளிக்க போவதாக சொன்ன வடிவேல் சுரேஷ்வும் மஹிந்த ராஜபக்ஷவின் பிணாமி அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு பின் விலகியவர்கள்.

தொழிலாளர்களை அடமானம் வைத்து அரசியல் குளிர் காயும் இவர்கள் இன்று 750 ரூபாய் சம்பளத்தை வழங்கி 234 ரூபாவை மாதாந்த சந்தா பணமாக பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இந்த விடயம் இந்த தலைவர்களுக்கு வெற்றியே தவிர தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வெற்றி அல்ல. தேயிலை சபையின் ஊடாக பெறப்பட்டு வழங்கப்படும் நிலுவை தொகையில் ஏமாற்ற முடியாது.

அவ்வாறு பெறப்படும் தொகை மத்திய வங்கி கொள்ளை போல எதிர்காலத்தில் இத்தொகைக்கு குள்ளநரிகள் பதில் சொல்ல வேண்டும். அத்தோடு இது நியாயமான சம்பள உயர்வு அல்ல.

இதற்காக எமது சங்கமும், ஜே.வி.பியும், அனைத்து தரப்பினர்களுடனும் இணைந்து எதிர்காலத்தில் போராடவுள்ளோம்.

அதற்கு முன்பதாக இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பில் நேரடி விவாதத்தை ஆறுமுகன் தொண்டமானுடன் மேற்கொள்ள நாம் தயாராகவும் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.