காணி முறைப்பாடுகள் தொடர்பான வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் விசாரணைகள் ஆரம்பம்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சனைகள் தொடர்பாக விசேட காணி மத்தியஸ்த சபையிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தலைமையில் காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை முறைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களும், விசாரணைகளும் இடம்பெற்றன.

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணிப் பிணக்குகள் தொடர்பாக விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் இதுவரை 370 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் அடிப்படையில் முதல்கட்டமாக இன்று 10 காணிப் பிணக்குகளுக்கான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது முறைப்பாட்டாளர்கள் மற்றும் எதிர் தரப்பினர் ஆகியோருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வருகை தந்திருந்தனர்.

ஒவ்வொரு முறைப்பாடுகளும் மூவர் கொண்ட மத்தியஸ்தர் குழாம் மூலம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்ட கலந்துரையாடல்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் விசேட காணி மத்தியஸ் சபை ஆணைக்குழுவின் ஆலோசகர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.திருநாவுக்கரசு, ஆசியான் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.ஜயந்த, நீதி அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.