மன்னார் மனிதப்புதை குழியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள்: கார்பன் பரிசோதனை அறிக்கை இரு வாரங்களில்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மனிதப்புதை குழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை அறிக்கை இரு வாரங்களில் வெளிவரும் என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 135ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 22ஆம் திகதி நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் வழமை போல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் இருந்து 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 294 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு 23ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு மறு நாள் 24ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்து செல்லப்பட்டு, புளோரிடாவில் உள்ள கூடத்திற்கு கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மனித எலும்புக்கூடுகளின் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் அறிக்கை இன்னும் இரு வாரங்களில் எமக்கு கிடைக்கும். எமது அகழ்வு பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.