இந்திய பிரஜையை சந்தித்தமையை மறந்து போன நாமல் ராஜபக்ஷ

Report Print Steephen Steephen in சமூகம்

முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்திய பிரஜை ஆகியோரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய நாடாமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, அவரது மனைவி சசி வீரவங்ச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியிருந்த நாமல் ராஜபக்ச, தன்னை சந்திக்க அதிகளவானோர் வருவதாகவும் இந்திய பிரஜை தன்னை சந்திக்க வந்தாரா என்பது தனக்கு நினைவில் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேர்சில் தோமஸ் என்ற இந்திய பிரஜை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது வீட்டுக்கு சென்றிருந்ததாக வீரவங்சவின் மனைவி வழங்கிய வாக்கு மூலத்தின் மூலம் உறுதியாகி இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.