வழமைக்கு திரும்பியுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் பணிகள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் மேற்கொண்டு வந்த பணி பகிஸ்கரிப்பு இன்று பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

நாவற்குடா பகுதியில் நேற்று முன்தினம் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், அவர்களுக்கான நீதி வேண்டி நேற்று மாநகரசபை ஊழியர்கள் பணிக்கும் செல்லாமல் வாயில் கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு மாநகரசபையின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஆதரவு வழங்கிய நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய உறுதி மொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்ட போதிலும் தொடர்ந்தும் பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வந்ததுடன் நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் அனைத்து செயற்பாடுகளும் முடங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்ற அதேவேளையில் இன்றும் மாநகரசபையின் ஊழியர்கள் தொடர்ந்து பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தாக்கியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்ப்படுத்தும் வரையில் தமது பணி பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என மாநகரசபை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.இதன் காரணமாக கழிவகற்றல் செயற்பாடுகள் உட்பட பல்வேறு புனரமைப்பு பணிகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் அறிவித்ததினை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.