திருகோணமலையில் போலி நாணயத்தாள்களுடன் பலர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவ்பொத்தான நகரப்பகுதியில் 1000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் முச்சக்கர வண்டியில் வருகை தந்து கடையொன்றில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர்.

எனினும் அப் பணத்தில் மாற்றம் தென்பட்டதையடுத்து பணத்தை சோதனையிட்டபோது போலி நாணயத்தாள் என கடை உரிமையாளருக்கு தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து கடை உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அவருடன் சேர்த்து இன்னும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் ஆயிரம் ரூபாய் 29 தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் 175,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவரை இன்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரை மொரவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதில் ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் 16ம் ஆயிரம் ரூபாய் தாள்கள் 95 அடங்குவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.