வித்தியா படுகொலை வழக்கு! விசாரணைகளை விரைவு படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிரான வழக்கின் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையொன்றை தாக்கல் செய்தனர்.

அதில் குறித்த வழக்கு விசாரணை செய்யப்படும் வழக்கு இலக்கமாக NP/1/22/15 என்ற வழக்கின் கீழேயே விசாரணை செய்யப்படுவதாக குறிப்பிட்டனர்.

இதனையடுத்து இவ் வழக்கில் சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி துசித் ஜோன்தாசன் குறித்த குற்றப் புலனாய்வு பிரிவரின் மேலதிக அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதாவது குற்றப் புலனாய்வு பிரிவினர் சமர்பித்த வழக்கு இலக்கம் வித்தியா படுகொலை வழக்கு இலக்கம் எனவும், அந்த வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என தெரிவித்தனர்.

மேலும் குறித்த வழக்கின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதியே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக சரியான தகவலை மன்றுக்கு தெளிவுபடுத்துமாறும், குறித்த வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டார்.