மொனராகலையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியை தாக்கி விட்டு தப்பிச் சென்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு தடை ஏற்படுத்தியதுடன், அவரது தோள் பட்டையில் கடித்து காயம் ஏற்படுத்திய பெண் மற்றும் அவரது கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் தோள் பட்டையை கடித்தமையினால் காயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று முன்தினம் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.
மொனராகலை நோக்கி பயணித்த கெப் வண்டியை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரி சைகை காட்டிய போதிலும், நிறுத்தாமல் இருவரும் சென்றுள்ளனர்.
அந்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி அவர்களை வழிமறித்துள்ளார்.
வீதி சட்டத்தை மீறியமையினால் பொலிஸ் அதிகாரி அபராத தொகையை செலுத்துமாறு ஆவணத்தை வழங்கியுள்ளார். இதன்போது அதனை கண்டுகொள்ளாமல் குறித்த வாகனத்தை ஓட்டிய தம்பதி மீண்டும் முன்நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர்.
எனினும் பொலிஸ் அதிகாரி அதனை தடுத்தமையினால் வாகனத்தில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியின் தோள்ப்பட்டையை பலமாக கடித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த தம்பதியை பொலிஸார் கைது செய்து மொனராகலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.