திருகோணமலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் வாக்குமூலம் பதிவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா, கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 7 கடற்படை உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அமைதியின்மையின் போது கையடக்கத்தொலைபேசியூடாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளும் மேலதிக விசாரணைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 2 விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அமைதியின்மையின் போது எதிர் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கற்பிரயோகத்தில் படுகாயமடைந்த 2 கடற்படை உத்தியோகத்தர்கள் கொழும்பு கடற்படையின் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மேலும் 3 உத்தியோகத்தர்கள் திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிண்ணியா - கண்டல்காடு பாலத்திற்கு அருகில் மகாவலி கங்கையில் பாய்ந்து காணாமல்போயிருந்த மற்றுமொரு இளைஞனின் சடலமும் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக கடற்படையினர் நேற்றுமுன் தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போது மூவர் கங்கையில் பாய்ந்த நிலையில், அவர்களில் ஒருவர் தப்பியதுடன் இருவர் காணாமல்போயிருந்தனர்.

காணாமல்போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதோடு கடற்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்த தேடுதலில் 19 வயதான பசீர், ரமீஸின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...