நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து சட்டவிரோத பொருட்கள் மீட்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மூர்வீதி பள்ளிவாசல் வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூலர் வாகனத்தினுள் இருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை மன்னார் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் ஒன்றின் வளாகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி கூலர் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வாகனத்தை உரியவர்கள் அவ்விடத்தில் இருந்து நீண்ட நேரமாக எடுத்து செல்லாத நிலையில், மதஸ்தலத்தின் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் உடனடியாக மன்னார் பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தந்து வாகனத்தை பார்வையிட்டுள்ளனர்.

எனினும் குறித்த வாகனத்தின் உரிமையாளர் நீண்ட நேரமாகியும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில் வாகனத்தை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் காணப்பட்ட ரெஜிபோம் பெட்டிகளில் 17 பொதிகளை கொண்ட பீடி சுற்றும் 479 கிலோகிராம் நிறையுடைய இலைகள் காணப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை யாரும் உரிமை கோரவில்லை எனவும், சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.