சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு!

Report Print Murali Murali in சமூகம்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 13ஆம் திகதி வழங்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

சி.வி.விக்னேஸ்வரன், மாகாண முன்னாள் அமைச்சர்கள் கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்தார் எனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மாகாண அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுவது தவறு எனச் சுட்டிக்காட்டி, தம்மைப் பதவியில் தொடர அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்த உத்தரவில் உடனடியாக டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு ஆவன செய்யுமாறு மன்று பணித்திருந்தது.

ஆனால், தாம் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்றும், அந்த நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை உதாசீனம் செய்தமை மூலம் முதல்வர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்றும் தெரிவித்து டெனீஸ்வரன் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

எனினும், குறித்த கட்டளையை நடைமுறைத்தப்படுத்த தவறியதால் அவர்கள் மூவருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் தனியாக முன்வைக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தது. இந்த நிலையில் இன்று குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பான தீர்ப்பை வரும் 13ஆம் திகதி வழங்கும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest Offers

loading...