யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர்! பொலிஸார் ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை?

Report Print Murali Murali in சமூகம்

“யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெறவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபரை பாதுகாத்து தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை எனவும், அவரை பொதுமக்கள் தாக்கியிருந்ததால் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கவேண்டியது பொலிஸாரின் கடமை” எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறுமியைக் கடத்திச் செல்லும் நோக்குடன் நடமாடினார் என்று தெரிவித்து நாவாந்துறை சந்தைப் பகுதியில் வைத்து பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று நையப்புடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் அந்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபரைப் பொறுப்பேற்ற பொலிஸார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

எனினும், குறித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் விசனம் வெளியிட்டிருந்தனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இவ்வாறு கூறினார்.

“மக்களால் பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெறவில்லை. அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

அதனால் அவரைப் பாதுகாத்து தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை. பொதுமக்கள் அந்த நபரைக் கடுமையாகத் தாக்கியிருந்தனர்.

அதனால் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கவேண்டியது பொலிஸாரின் கடமையாகும். அந்த நபரைத் தாக்கியவர்களைப் பொலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.

எனினும் எந்தவொரு நடவடிக்கையையும் பொலிஸார் எடுக்கவில்லை. ஊடகங்கள் பொலிஸார் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers

loading...