சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக 545 வழக்குகள் தாக்கல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக 545 வழக்குகள் தாக்கல் செய்யபட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி அசோக திலகரட்ண தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சட்டவிரோதமாக கள்ளு மற்றும் சாராய விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த வருடத்தில் மாத்திரம் 545 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மதுவரி திணைக்களத்தால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இன்று வினவிய போதே மேற்படி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அந்த வகையில் வரிசெலுத்தாமல் பீடிகள் விற்பனை செய்யபட்டமைக்காக 3 வழக்குகளும், சட்ட விரோதமாக கள்ளு விற்பனை செய்தமைக்காக 270 வழக்குகளும், அனுமதிபத்திரம் இன்றி கள்ளை வைத்திருந்தமைக்காக 15 வழக்குகளும், அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தமைக்காக 35 வழக்குகளும்,

கஞ்சா வைத்திருந்தமைக்காக 5 வழக்குகளும், சட்டவிரோத வடிசாரயத்தை உடைமையில் வைத்திருந்தமைக்காக 3 வழக்குகளும், அனுமதியின்றி வெளிநாட்டு மதுபானங்கள் வைத்திருந்தமைக்காக மூன்று வழக்குகளும்,

அனுமதியின்றி பீடியினை உற்பத்தி செய்தமைக்காக 6 வழக்குகளும், 21 வயதிற்கு கீழ்பட்டவர்களிற்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்தமைக்காக 154 வழக்குகளும், பொது இடத்தில் புகைத்தமைக்காக 54 வழக்குகளும், தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த குற்றசாட்டுகளுடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவர்களிற்கான தண்டபணமாக அண்ணளவாக 56 இலட்சம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.