முல்லைத்தீவில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் மக்களை படம் எடுக்கும் மர்மநபர்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு- கேப்பாபுலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகைப்படம் எடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த மர்ம நபர்களுக்கு இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு பிரதான இராணுவ முகாம் முன்பாக 702 ஆவது நாளான இன்றும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் போராட்டங்கள் வலுப்பெறும் சந்தர்ப்பங்களில் இராணுவத்தினர் நேரடியாக பொதுமக்களை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்வது வழக்கமாக காணப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே இராணுவத்தினர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாதாரோல் வன்முறை தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதான முகாம் பாதுகாப்பிற்காக பிரதான வாசல் மற்றும் ஏனைய இடங்களில் நிரந்தரமாகவே நவீன வசதிகள் கூடிய சீ.சீ.ரி.வி ஒளிப்பதிவு கமராக்களையும் படைதரப்பினர் பொருத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிவில் உடையில் உள்ள சில மர்ம நபர்கள் இராணுவ காவலரணில் நின்று இராணுவத்தினாரின் பாதுகாப்புடன் மறைந்திருந்து புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களாள் குற்றம் சாட்டியுள்ளனர்.