கேப்பாப்பிலவு படை முகாமை பலப்படுத்தியுள்ளது இராணுவம்

Report Print Rakesh in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து அந்த இராணுவ முகாமைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு பூர்வீகக் கிராம மக்கள் 703ஆவது நாளாகப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

2017.03.01 அன்று ஆரம்பித்த மக்களது நிலமீட்புப் போராட்டத்தின்போது கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன.

மிகுதிக் காணிகள் விடுவிக்கப்படாமல் அதில் இராணுவத்தினர் தமது படை முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ளனர். இந்தக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

மக்களின் போராட்டத்துக்கு எதிராகப் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளபோதும், படையினருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தைத் தொடர நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், மக்களின் போராட்டத்தை தொடர்ந்து முகாம் வாயில்களை முட்கம்பிகளைக் கொண்டும், பல்வேறு தடுப்புக்களைப் போட்டும் இராணுவத்தினர் பலப்படுத்தியுள்ளனர்.