காதலியை பயன்படுத்தி செல்வந்தரிடம் கப்பம் பெற முயற்சித்த நிறுவன அதிகாரி கைது

Report Print Steephen Steephen in சமூகம்

தனது காதலியை பயன்படுத்தி நாட்டின் முன்னனி செல்வந்த வர்த்தகர் ஒருவரிடம் மூன்று கோடி ரூபாய் கப்பம் பெற முயற்சித்த ஊடக நிறுவனம் ஒன்றின் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

பெண்ணொருவருடன் குறித்த வர்த்தகர் தனது காரில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளியை, அவரது மனைவியிடம் காண்பிக்க போவதாக அச்சுறுத்தி, சந்தைப்படுத்தும் அதிகாரி மூன்று கோடி ரூபாயை கப்பமாக கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கப்ப பணத்தை தனது தனிப்பட்ட செயலாளரான பெண்ணிடம் வழங்குமாறு வர்த்தகருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பெண், பத்தரமுல்ல பகுதியில் உள்ள வர்த்தகரின் பிரதான அலுவலகத்திற்கு சென்ற போது, பொலிஸார் கடந்த 25 ஆம் திகதி கைதுசெய்தனர்.

பொலிஸார் கைது செய்த பெண்ணின் செல்போனை கைப்பற்றிய பொலிஸார், அதனூடாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட பெண், 35 வயதான ஒரு பிள்ளையின் தாய் எனவும் சந்தேக நபர் பணியாற்றி வரும் ஊடக நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக செய்தியாளராக கடமையாற்றி வந்துள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஊடக நிறுவனத்தில் இருந்து விலகிய அந்த பெண் செல்வந்த வர்த்தகரின் தனிப்பட்ட செயலாளராக பணியில் சேர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.