பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றின் எதிர்பாராத முடிவு?

Report Print Murali Murali in சமூகம்

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது, இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பார்த்து, கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகை காண்பித்து எச்சரிக்கை செய்தார்.

இந்த விடயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் புலம்பெயர் தமிழர்களின் முன்முயற்சியால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு கடந்த 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், பிடியாணை உத்தரவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது நீதிமன்றுக்கு வெளியே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.