காணி உறுதிப்பத்திரம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற 15000 வழங்கப்படாத காணி உறுதிப்பத்திரங்களையும் காரியாலயங்களில் தேங்கி இருக்கும் பத்திரங்களையும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன் அதன் வேலைகளை பூர்த்தியாக்குமாறும், 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மூன்று மாவட்டத்திற்கும் உறுதிப்பத்திரங்களை பிரித்து கையளிக்குமாறும் கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் நீண்ட நாட்களாக அந்த காணிகளில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதை குறித்தும் இக்கூட்டத்தின் போது ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் காணி அமைச்சினுடைய செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.