கஞ்சா கடத்தல் மற்றும் ஆவா குழு தொடர்பில் பயமின்றி தகவல் வழங்கலாம்

Report Print Sumi in சமூகம்

கஞ்சா கடத்தல் மற்றும் ஆவா குழு தொடர்பில் பொதுமக்கள் எந்த பயமுமின்றி தகவல்கள் வழங்க முடியும் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் பாதுகாக்கப்படுமென்றும், அவ்வாறு இரகசிய தகவல்கள் வழங்க விரும்பும் பொதுமக்கள் தனது தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய சிறுவனை தாக்கியமை தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தேவையான நேரங்களில் தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியும்.

தகவல் வழங்குவது தொடர்பாக இரகசியம் பேணப்படும். தகவல் தருபவர்கள் தொடர்பில் யாருக்கும் சொல்ல மாட்டோம். வேறு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், அந்த பிரச்சினைகளை நாங்கள் பொறுப்பேற்று கொள்வோம்.

கிளிநொச்சி சம்பவம் தொடர்பாக பரிசீலணை செய்த போது, அந்த சிறுவன் துவிச்சக்கரவண்டி ஓட்டி சென்ற வேளை மோட்டார்சைக்கிள் வருவதை அவதானிக்காமல் சென்றதினாலே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் வழங்கியமைக்காக சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களுக்கு தகவல் வழங்க முடியும்.

பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers