வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா தனியார் கல்வி நிலையங்களை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் கல்வி நிலையங்களின் சங்கத் தலைவர் தி.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன் தினம் நாளைய தினம் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை மகாவித்தியன் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்களை மூடி குறித்த நிகழ்வில் பழைய மாணவர்களுடன், அவர்களது பிள்ளைகளும் கலந்து கொள்வதற்கு இலகுவாகவும் தனியார் கல்வி நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா நகரசபையின் தலைவர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை தனியார் கல்வி நிலையத்தின் ஒன்றிய நிர்வாகம் இன்று விசேட கூட்டமொன்றின் ஊடாக தீர்மானத்தினை எடுத்துள்ளது.

அதன் பிரகாரம் நாளை 11ஆம் ஆண்டு உட்பட்ட அனைத்து தனியார் வகுப்புகளையும் நிறுத்துவது எனவும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் வழமைபோன்று நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்பு மாணவர்கள் பலர் வேறு பிரதேசங்களில் இருந்து வவுனியாவிற்கு விடுமுறை நாட்களில் வருகை தந்து கற்பதுடன் சிலர் தங்கியிருந்தும் தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.

அத்துடன் உயர்தர வகுப்புகளுக்கு கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்தும் ஆசிரியர்கள் வவுனியாவிற்கு வருகை தருவதனால் குறித்த வகுப்பை நிறுத்துவது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.