ஹட்டனில் தொடரும் சத்தியாகிரக போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க கோரியும் இன்று மலையகத்தில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்று கொடுப்பதாக கூறிய அரசியல் தலைவர்கள் கடந்த வாரம் 700 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கிலும் பல ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புப் பேரணிகளும் வீதி மறியல் போராட்டங்களும் இடம்பெற்று வந்த நிலையில் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வாங்கித் தருவேன் எனக்கூறிய மலையக அரசியல் தலைவர்கள் 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துக்கு கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த சம்பள உயர்வை பார்க்கும்போது வெறுமனே தோட்டத் தொழிலாளர்களுக்கு இருபது ரூபா மாத்திரமே இரண்டு வருடங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பள உடன்படிக்கையானது தோட்டத் தொழிலாளர்களை முழுக்க முழுக்க காட்டிக்கொடுத்து அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என இந்த எதிர்ப்பு நடக்கும்போது தெரிவிக்கப்பட்டன.

அட்டன் மல்லிகைப்பூ சந்தியில் இன்று சத்தியாகிரக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த சத்தியாகிரக போராட்டம் கொழும்பில் தோட்டத் தொழிலாளர்களுக்காக சத்தியாகிரகம் செய்த இளைஞர்களும், மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் ஒழுங்கு செய்திருந்தனர்.

இதன்போது “மலையக மக்களை அடகு வைக்காதே” “கூட்டமைப்பு தலைவர்களை கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக உங்கள் கதை என்ன” “அரசு மலையக மக்களின் சம்பள விடயம் தொடர்பாக தலையீடு ஏமாற்ற வேண்டாம்”; போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை

காட்சிப்படுத்திய வண்ணம் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த சம்பள உயர்வு தொடர்பாக ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சத்தியாக்கிரக போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது தாய் தந்தையர்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 200 வருட காலமாக இந்த தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு வரும் என்பது தொழிலாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஐந்து ரூபாய் கிடைத்திருந்தாலும் இன்று அவர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்திருக்கும்.

ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் எமது தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவோம்.

இல்லாவிட்டால் நாடாளுமன்ற பதவியை துறப்பேன் என்று ஒருவர் கூறினார் மற்றுமொருவர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்காவிட்டால் தன்னை தீயிட்டு கொளுத்திக்கொள்வேன் என்றார்.

ஆனால் இவ்வாறு கூறியவர்கள் விலகவும் இல்லை தன்னை கொளுத்திக்கொள்ளவும் இல்லை கூட்டு ஒப்பந்தம் என்ற அடிமை சாசனத்தை வைத்து தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக இவர்கள் எவரும் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை இருபது ரூபாய் கொடுத்து விட்டு அதிகூடிய சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று மார்பில் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு நாம் சொல்வது தோட்டத் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை உங்கள் குடும்பத்துடன் சென்று ஒருநாள் மலையேறி பாருங்கள் எமது தந்தையர்கள் படும் கஷ்டத்தை ஒரு நாள் முள்ளு குத்தி பாருங்கள் பாருங்கள்.

அப்போது உங்களுக்கு இதன் வலி என்ன என்பது தெரியும். தொழிலாளர்களை தயவு செய்து தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். இந்த போராட்டம் நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை தொடரும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers