மாலியில் கொல்லப்பட்ட படையினரின் வீடுகளுக்கு சென்ற மைத்திரி!

Report Print Murali Murali in சமூகம்

ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து மாலி நாட்டில் கடமையிலிருந்தபோது உயிர்நீத்த இராணுவ வீரர் எஸ்.எஸ்.விஜேகுமாரவின் தாயார், மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

பொல்பிட்டிகம பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த இராணுவ வீரரின் இல்லத்திற்கு இன்று பகல் சென்ற ஜனாதிபதி, அன்னாரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

உயிர் நீத்த இராணுவ வீரர்கள் இருவரினதும் பூதவுடல்கள் நாளை நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன், இது தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.பி.ஏக்கநாயக்க, சாந்த பண்டார ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மாலியில் கொல்லப்பட்ட மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

பொலன்னறுவை அபயபுர பிரதேசத்தில் உள்ள மேஜர் ஜயவிக்ரமவின் வீட்டுக்கு நேற்று சென்ற ஜனாதிபதி அவர்கள், அவரது தாயாரான யு.டி.பிரேமகாந்தி மற்றும் தந்தை கமன்கொட ஜயவிக்ரம ஆகியோரிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

தாய் நாட்டுக்கு புகழை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஐ.நா. சமாதான செயன்முறையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்த இந்த உன்னத வீரர்களின் மரணம் குறித்து தான் மிகுந்த கவலையடைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட விருந்தினர்களுக்கான புத்தகத்திலும் விசேட அனுதாப குறிப்பொன்றை பதிவு செய்தார்.

Latest Offers