ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி சுதந்திர தினத்திலும் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கக்கோரி, பொகவந்தலாவ கெம்பியன் நகரத்தில் இன்றையதினம் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கெம்பியன் நகரத்தில் கறுப்பு கொடிகளை ஏந்திய வண்ணம் ஆயிரம் ரூபா இயக்கம் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

நாட்டின் 71ஆவது சுதந்திர தினத்தில் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை போல தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கறுப்பு பட்டிகளை அணிந்து கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். அத்தோடு முச்சக்கரவண்டிகளில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடி கழற்றப்பட்டு கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

நியாயமான சம்பளத்தை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.