தமிழ்த் தேசத்துக்கு இது சுதந்திர தினம் அல்ல...!

Report Print Rakesh in சமூகம்

இலங்கைத் தீவுக்கான சுதந்திர தினமாக இது கருதப்பட்டாலும்கூட, இந்தத் தீவின் வடக்கு, கிழக்கை தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ்த் தேசத்துக்கு இது சுதந்திர தினம் அல்ல. இது அடிமைத்தினம், கரிநாள் என தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவுக்கு பிரிட்டிஷ் கொலனித்தவ ஆட்சியாளர்கள் சுதந்திரமளித்ததின் 71ஆவது ஆண்டு தினம் இன்றாகும்.

இலங்கைத் தீவுக்கான சுதந்திரதினமாக இது கருதப்பட்டாலும்கூட, இந்தத் தீவின் வடக்கு, கிழக்கை தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ்த் தேசத்துக்கு இது சுதந்திர தினம் அல்ல. இது அடிமைத்தினம் கரிநாள்.

இலங்கைத் தீவில் சரித்திர காலம் தொட்டு ஆழமான வேரோடல்களைக் கொண்ட தமிழர்களின் தேசத்தை அவர்களின் இறையாண்மையை பலவந்தமாகக் கபளீகரம் செய்து, ஆட்சி செய்த அந்திய கொலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள், தமிழரின் அந்த இறைமையை அப்படியே சிங்கள தேசத்தின் இறைமையுடன் சேர்த்து பெளத்த, சிங்களப் பேரினவாதிகளிடம் ஒப்படைத்துச் சென்றமையைக் குறிக்கும் இந்தத் தினத்தை தமது அடிமை வாழ்வுக்கான கரிநாளாக கறுப்புத் தினமாக வேதனையுடன் தமிழர்கள் எதிர்கொள்கின்றார்கள்.

சிங்கள தேசம் தனது சுதந்திர தினத்தை வழமைபோல தெற்கில் பேரெழுச்சியுடன் கொண்டாடுன்றது. சுமார் நாலரை தசாப்த காலமாக இந்த சுதந்திர தின விழாக்களை தமிழ்த் தேசியத் தலைவர்கள் புறக்கணித்து வந்தார்கள்.

தந்தை செல்வாவில் தொடங்கி தளபதி அமிர்தலிங்கம் வரை இந்த சுதந்திர தின நிகழ்வுகளைப் பகிஷ்கரித்து வந்தனர். அவர்கள் வழியைத் தொடர்ந்த தமிழ்ப் போராளித் தலைவர்கள், சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தன்று பல தாக்குதல்களை நடத்தித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியும் வந்தார்கள்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இப்போதைய தலைவர்கள் இந்த நடைமுறையை மாற்றி அமைத்தனர்.

தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழ் மக்களின் ஆன்மாவின் குரலைப் பிரதிபலிக்கின்றமை போல முன்னெடுக்கப்பட்ட - தென்னிலங்கையின் சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்கும் நடைமுறையைத் தகர்த்தார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

தனது நம்பிக்கைக்குரிய உதவியாளரான சுமந்திரனுடன் சென்று அந்த நிகழ்வில் பங்குபற்றினார். இது 2016 பெப்ரவரியில் ஆரம்பமாயிற்று.

நீண்ட காலம் நாட்டில் புரையோடிப் போயிருக்கும் தமிழர் பிரச்சினைக்கு ஒரு சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும், ஓர் இணக்கத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கருதிய சம்பந்தன், அதற்கான முழுமுயற்சிகள் எடுக்கப்படும் இச்சமயத்தில், அதற்குரிய பிரதிபலிப்பு - அம்முயற்சிக்கு நம்பிக்கை ஊட்டும் பங்களிப்பும் செயற்பாடும் தமிழர் தரப்பிலிருந்து காட்டப்பட வேண்டும் என்று அப்போது கருதினார்.

அதனால்தான் 2016 முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்க் கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்கள் பங்குகொள்ளும் நிலைமையை அவர் ஏற்படுத்தினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆரம்பித்த இந்த நன்முயற்சிகளுக்குப் பதிலீடான - சமத்துவமான - செய்தியோ, சமிக்ஞையோ, பிரதிபலிப்போ தென்னிலங்கைச் சிங்களத்திட மிருந்து இன்னும் வரவேயில்லை. நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கின்றது மேம்படவில்லை.

பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இழுபட்ட இந்த தேசிய இனப்பிரச்சினையே இந்தத் தீவில் தீராத பெரும் பூசலாகி மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் போருக்குக் காரணமாயிற்று.

இந்த இலங்கைத் தீவைப் பீடித்துள்ள இனப் பிரச்சினை என்ற மோசமான - கொடிய நோய் நாட்டையும் மக்களையும், சமூகத்தையும் சீரழித்து வருகின்றது. அதன் விளைவுதான் இந்த நாட்டின் உள்நாட்டு யுத்தம்.

இந்த இலங்கைத் தீவையே அடியோடு புரட்டிப் போட்டு, பல லட்சம் பேரின் உயிர்களைக் காவுகொண்டு இரண்டு தலைமுறைகளின் எதிர்காலத்தைச் சூனியமாக்கிய இந்த யுத்தத்தின் பிரதான காரணம் இந்த இனச் சிக்கல்தான்.

நீதி, சமத்துவம், கெளரவாழ்வு, இனத்துக்கான சுதந்திரம் ஆகியவற்றுக்காகப் போராடிய தமிழ்ப் போராளிகள் இலங்கை அரசினால் ஆயுதமுனையில் அடக்கப்பட்ட நிலையில் அவர்களை 'பயங்கரவாதி'களாகத் தூஷித்தப்படியும், யுத்தக் குற்றங்களைத் தாராளமாக இழைத்து, அதன் மூலம் வெற்றி வாகை சூடிய படையினரை 'சுதந்திர வீரர்'களாக போஷித்தபடியும் இன்று கொண்டாடப்படும் சுதந்திர தினம் இந்தத் தீவின் தேசிய இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவந்து விடப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

தமிழர்களை வெற்றி கொண்ட மமதையில் சிங்களவரும், சிங்களவர்களிடம் தோற்ற மன ஒடுக்கத்தில் தமிழரும் சமரசம் பேசுவது உண்மையான நல்லிணத்துக்கு வழி சமைக்காது.

"வன்மொழியில் பேசிய விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதமுனையில் ஒடுக்கப்பட்டமையும், மென்மொழியில் பேசும் சம்பந்தன் கூழைக் கும்பிடு போடுபவர் போல, சீறிச் சினக்காமல் வார்த்தைகளில் அடக்காமாகப் பேசுகின்றமையும், இனப்பிரச்சினை விவகாரத்தைத் தமிழர் தரப்பை 'அடக்கி வைக்கும்' வகையில் தீர்க்கலாம் என்ற முடிவைத் தென்னிலங்கைக்குத் தந்திருப்பது போலத் தோன்றுகின்றது'' - என அப்போது குறிப்பிட்டிருந்தோம்.

அது மேலும் உறுதிப்பட்டிருப்பதாகவே இப்போது இடம்பெற்றுவரும் சம்பவங்களும் நிகழ்வுகளும் எமக்கு எடுத்தியம்புகின்றன.

மென்வலு மூலம், தென்னிலங்கைச் சிங்கள, பெளத்த தலைவர்களுடன் தந்திரமாகப் பேசி, பவ்வியமாகத் தீர்வைப் பெறும் சம்பந்தன் - சுமந்திரனின் தந்திரோபாயம் தோற்று வருகின்றமை வெளிப்படையாகி வரும் இச்சமயத்தில், இன்றைய சுதந்திர தின விழாவிலும் அவர்கள் 'தலைகாட்டி' தமது பிரசன்னத்தை வெளிப்படுத்தி, தீர்வுக்கான யாசிப்பு முயற்சியைத் தொடர்வார்களா? முடிவு இன்று தெரிந்து விடும்தானே...! என குறிப்பிடப்பட்டுள்ளது.