சம்பள அதிகரிப்பு கோரி, ஹட்டன் - மல்லிகைப்பூ சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரப் போராட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கிய, அகில இலங்கை இந்து மகா சபையின் தலைவர் சிவஸ்ரீ வேலுசர்மாவின் காரை இனந்தெரியாத சிலர் நேற்றிரவு தாக்கிய சேதப்படுத்தியுள்ளனர்.
ஹட்டன் - மஸ்கெலியா கொமர்ஷல் பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுக்கு எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பார்கள் என தொழிலாளர்களுக்கு ஆதரவான அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என கோரி தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தன.
இந்த நிலையில், அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கையில் தொழிலாளர்களின் சம்பளம் 700 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரக்ள் உட்பட பல தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வை வழங்கவில்லை என்றால், அமைச்சு பதவிகளில் இருந்து விலக போவதாகவும் அந்த அமைச்சர்கள் அறிவித்திருந்தனர்.