கல்லுடைப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து யேசுபுரம் பிரதேச மக்கள் உண்ணாவிரதம்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா பெரியகோமரசங்குளம், யேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலைகுன்றில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மலையின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் குறித்த பகுதியில் கொட்டகை ஒன்றை அமைத்து இரண்டாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இப் பிரதேசத்தில் கல் உடைப்பதினால் பொது மக்களிற்கு பாதிப்பு ஏற்படுகின்ற நிலை ஒன்று உருவாகியுள்ளது. அருகில் உள்ள பொது மக்களின் வீடுகளில் வெடிப்புகள் உருவாகின்றது.

கல்லுடைப்பதற்கு பயன்படும் வெடிபொருளில் இருந்து பரவுகின்ற நச்சு தன்மையானது பிள்ளைகள் சுவாசிக்கும் போது அவர்களிற்கு அசௌகரியங்களை கொடுப்பதுடன், நோய்களும் ஏற்படுகிறன.

குறித்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த டிசம்பர் மாதம் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், அரச அதிபருக்கும் தெரியபடுத்தியிருந்தனர்.

அதற்கமைய குறித்த பகுதியில் கல் உடைப்பதால் பாதிப்புகள் ஏற்படுகின்றதா என்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்திருந்தது. அதன் பின்னர் கல் உடைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஆய்வு நடவடிக்கையின் போது சிறிய அளவிலான வெடிபொருட்களே பயன்படுத்தபட்டதாகவும், ஆனால் தற்போது மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தபடுவதாகவும் குற்றம் சாட்டும் கிராமவாசிகள், குறித்த மலையில் கல்லுடைக்கும் பணிக்கு முற்றுமுழுதாக தடைவிதிக்கபடவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதேவேளை, போராட்டம் நடைபெறும் பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மக்களின் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்ததுடன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் அழைத்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த கல்லுடைக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர். எனினும் மக்களது போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.