யாழில் எரிகாயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

Report Print Murali Murali in சமூகம்

யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த 19 வயதான விஸ்ணுகுமார் தனுசன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த இளைஞன் ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த இளைஞன் நேற்று மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை அவதானித்தவர்கள் அவரை மீட்டு ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடல் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் சடலத்தில் எரிகாயங்கள் காணப்படுவதாகவும், அதனால் குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.