யாழ். அரச தாதிகளினால் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர்களினால் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

தாதி உத்தியோகத்தர்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு தாதி உத்தியோகத்தர்கள் இருவர் தகாத உறவில் ஈடுபட்டனர் என்றும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ஊடகங்களில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதை வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதி செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சில ஊடகங்கள் அனைத்து தாதி உத்தியோகத்தர்களையும் பாதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதுடன் வைத்தியசாலைப் பணிப்பாளரால் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் தாதி உத்தியோகத்தர்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.