வெட்கக்கேடான துரோகம் இது! வவுனியாவில் பரவலாக துண்டுபிரசுரங்கள் விநியோகம்

Report Print Theesan in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் எனக்கோரி வவுனியாவில் இன்றைய தினம் பரவலாக துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியாவிற்கான 1000 ரூபா இயக்க அமைப்பினரால் இந்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

“1000ரூபாய்க்கான போராட்டம் காட்டிக் கொடுப்புக்களை எதிர்த்து முன்னோக்கிச் செல்கின்றது. காட்டிக்கொடுக்கும் தொழிற் சங்கங்கள் வழமைபோல போராட்டத்திற்குத் துரோகமிழைத்துள்ளன” எனக் குறித்த துண்டுபிரசுரங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

1000 ரூபாவை வெல்லும் வரையிலும் போராடும் 1000 ரூபா இயக்கம் இத்துண்டுப்பரசுரத்திற்கு உரிமை கோரியுள்ளனர்.

குறித்த துண்டுபிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் வழமைபோன்று மீண்டும் துரோகமிழைத்துள்ளன.

மதிப்பார்ந்த வாழ்க்கைக்கான தொழிலாளர்களது கோரிக்கையை மீண்டுமொருமுறை தூக்கியெறிந்துவிட்டு தொழிற்சங்கத்தலைவர்கள் முதலாளிகளுடன் இரகசியமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றார்கள்.

மூன்று மாதகாலம் நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் வெறும் 20 ரூபாய் சம்பளம் அதிகரிப்பிற்கு உடன்பட்டிருக்கின்றார்கள்.

இந்த உளுத்துப் போன தொழிற்சங்கங்கள் தோட்டத் துரைமாரை திருப்திப்படுத்துவதற்காக தொழிற்சங்கத் துரைமார்கள் செய்துள்ள மிகத் தெளிவான வெட்கக்கேடான துரோகம் இது.

தேசிய பொருளாதாரத்திற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வழங்கும் பாரிய பங்களிப்பினை இவர்கள் கருத்திற்கூட எடுக்கவில்லை. இந்த அசிங்கமான அரசியலுக்கு நாம் முடிவுகட்ட வேண்டும்.

1000ரூபா இயக்கம் எம் ஒவ்வொருவரினதும் இயக்கம். அது இப்போராட்டத்தில் வென்றே தீருவதென முடிவெடுத்துள்ளது. வெற்றியை எட்டும் வரை இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதென 1000ரூபா இயக்கம் உறுதிமொழி ஏற்றிருக்கின்றது.

சம்பள உயர்விற்கும் அப்பால் மதிப்பார்ந்த வாழ்வுக்கான எமது நிலங்களுக்காக, சுகாதாரத்திற்காக வீடுகளுக்காக, கல்வி உரிமைக்காக, ஏனைய உரிமைகளுக்காக விரிவடையப்போகும் எமது போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் என நாம் உங்களை அன்புடன் அழைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.