ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்: இம்ரான்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் இடம்பெறும் மண் அகழ்வு, காணிப் பிரச்சினைகளை ஆராய ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, கிண்ணியாவில் இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

திருகோணமலையில் தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள மண் அகழ்வு சம்மந்தமாக ஆராய்ந்து உரிய தீர்வை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு நான் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தேன்.

இந்த கோரிக்கையை ஏற்ற ஆளுநர் இது தொடர்பாக ஆராய விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளார். இக் கலந்துரையாடலில் முப்படை உயர் அதிகாரிகள், வனவிலங்கு, தொல்பொருள் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட இதனுடன் தொடர்புபட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அண்மையில் மண் அகழ்வின் போது கிண்ணியாவில் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் அசம்பாவிதங்களும் எதிர்வரும் காலங்களில் ஏற்படுவதை தவிர்த்தல், சட்டவிரோத மண் அகழ்வை தடுத்தல், மண் அகழ்வை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், முப்படையினருடனான சுமூக உறவு தொடர்பாக விரிவாக கலந்துரையாடி சுமூக தீர்வொன்றை எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், படையினரின் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்தல் சம்மந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் காணப்படும் காணிகளை முற்றாக விடுவித்தல், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என படையினர் கருதும் காணிகளை அவர்கள் விடுவிக்கும் வரை நஷ்டஈடு மற்றும் வாடகையை காணி உரிமையாளர்களுக்கு பெற்றுகொடுப்பது தொடர்பான கோரிக்கைகளை முப்படையினரிடம் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.