யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது என்பதுடன் அவ்வாறான சம்பவங்களும் விசாரணைகளும் நடைபெறவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு தாதி உத்தியோகத்தர்கள் இருவர் தகாத உறவில் ஈடுபட்டனர் என்றும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ஊடகங்களில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இது குறித்து யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியசாலை பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலை என்பது 500க்கும் மேற்பட்ட தாதியர்கள் கடமையாற்றும் புனிதமான இடம். எனவே இங்கு கடமையாற்றுபவர்கள் புனிதமாக கடமையாற்றுகின்றனர். நோயாளர்களை கவனத்துடனும் பரிவுடனும் கவனிக்கின்றனர்.

குறித்த தவறான தகவலால் வைத்தியசாலை சேவைகளை முன்னெடுப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் குறித்த தகவல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளோம். இந்த செய்தியால் இங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

தாதியர்கள் தவறிழைத்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் முதலில் உள்ளக விசாரணைகள் நடைபெற்றிருக்கும். ஆனால், அவை எதுவும் நடைபெறாத நிலையில் அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தாதியர்கள் மனவுளைச்சல் காரணமாக சேவையாற்றுவதில் தடைகளை எதிர்கொண்டுள்ளதுடன் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தாதியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றன. இவ்வாறன செய்தியால் தாதிய சேவைக்கு வர பெண்கள் தயங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.