கிண்ணியா இளைஞர்களின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்துமாறு கோரிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் கடலில் குதித்து உயிரிழந்த இரு இளைஞர்களின் மரணம் தொடர்பாக, நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட, கிண்ணியாவைச் சேர்ந்த இரு அப்பாவி இளைஞர்கள், கடந்த ஜனவரி 29ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருகோணமலை கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னர், படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால், குறித்த இரு இளைஞர்களும் அச்சமடைந்து, தம்மை துப்பாக்கிச் சூட்டில் இருந்து காப்பாற்றி கொள்ள, கடலில் பாய்ந்தனர்.

எனினும் இந்த இரு இளைஞர்களும் சடலமாகவே மீட்கப்பட்டனர். மண் அகழ்வுக்கான சட்டபூர்வ அனுமதி பத்திரத்துடனேயே அவர்கள் இதனை செய்து வந்துள்ளனர்.

நாட்டில் சொல்ல முடியாத எத்தனையோ பாரிய பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. ஆனால், அதனை விடுத்து அப்பாவி மக்கள் மீது மட்டுமே, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது?. இது குறித்து நீதியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதே போன்ற சம்பவம் மணலாறு பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளது. யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் யுத்தத்தின் பின்பும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்க வேண்டும்.

அது மாத்திரமின்றி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers