பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அமையம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த கோரிக்கை அடங்கிய எழுத்துமூல கடிதத்தினை அமையத்தின் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். சுபைர் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் திகதி ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கூட்டத்தில் குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் சுபைர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விடயத்தினை கருத்தில் கொண்ட ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார். அதன் பிரகாரம் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களின் விடுதலை தொடர்பில் கரிசனை கொண்டு செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்னாள் அமைச்சர் சுபைர் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாணவர்களின் விடுதலைக்காக முயற்சிகளை மேற்கொண்ட, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் சுபைர் மேலும் தெரிவித்துள்ளார்.