கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசேட விவசாய குழு கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை உரிய விலையில் சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் தலா இரண்டாயிரம் கிலோ நெல் மானிய உரக்கொடுப்பனவுக்கான பெயர் பட்டியல்படி விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கபட்டு கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு ஒரு கிலோ 38 ரூபாவுக்கும் சம்பா ஒரு கிலோ 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதுவரை 230 வரையான விவசாயிகள் விண்ணப்பப்பவடிங்களை பெற்றுள்ளனர்.
நேற்று வரை பத்தாயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள மேற்படி சபை மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் களஞ்சிய சாலைகளும் நெல் கொள்வனவிற்காக திறக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் நடைபெற்ற அமைச்சர் மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்கின்ற நெல்லை 2,000 கிலோ மட்டுப்படுத்தப்பட்ட அளவை மேலும் அதிகரிக்குமாறு தான் கோரியிருந்ததுடன், விவசாயிகளிடமுள்ள பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.