திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழ அகதி ஒருவர் நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இலங்கையின் 71ஆவது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், அதே சமயம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழ அகதிகள், தமது விடுதலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின்போதே, குறித்த ஈழ அகதி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் முகாமிற்கு பொறுப்பான அதிகாரி எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத அதே சமயம் இவர்களை வந்து பார்க்கவோ இவர்களது கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கவோ இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக 700 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றதுடன், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இந்தியாவில் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளின் விடுதலைக்கு இலங்கையிலும் யாரும் குரல் கொடுப்பதில்லை, இந்தியாவிலும் குரல் எழுப்பவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.