கல்வி அமைச்சின் அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Report Print Thirumal Thirumal in சமூகம்
111Shares

ஹட்டன் - பத்தனை, ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் நேற்றிரவு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த கல்வியியல் கல்லூரியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலைமை குறித்து ஆராயும் முகமாக இராதாகிருஷ்ணன் இன்று அங்கு விஜயம் செய்திருந்தார்.

அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் ஒரு சில அதிகாரிகளும், சிற்றூழியர்களும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பாகவும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் மாணவர்கள் இதன் போது தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பார்த்தப்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,

பத்தனை, ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியின் சமையல் கூடம் நேற்று கொட்டகலை சுகாதார அதிகாரிகளால் தற்காலிகமாக சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறி மூடப்பட்டுள்ளது.

அது சரியான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். அதனை தொடர்ந்து அந்த பகுதியை உடனடியாக சுத்தம் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுவரை தற்காலிகமாக சமையல் அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சமையல் அறை பகுதியை திருத்தி அமைப்பது தொடர்பாக நான் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவர்கள் அதனை திருத்தி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசி மூலமாக என்னிடம் தெரிவித்தனர்.

அதேவேளை விடுதி வசதிகள் மிகவும் மோசமாகவுள்ளதை காணமுடிகின்றது. இதனையும் திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு சில அபிவிருத்தி வேலைகள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை.

எனவே, எதிர்காலத்தில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கின்ற பொழுது முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முன்னெடுப்பதற்கு 7 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் விரிவுரையாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் சுற்றுச் சூழலும் மிகவும் மோசமாக இருக்கின்றது. இதனை, அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இதனை முறையாக செய்வதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்லூரியின் காரியாலயத்தில் மது அருந்திய பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களை வெளியேற்றக்கோரியும், முறையாக சுத்தமான உணவு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்லூரி வளாகத்தினுள் ஆசிரிய மாணவர்களால் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.