வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள உபகொந்துராத்து காரர்களுக்கு எச்சரிக்கை

Report Print Kumar in சமூகம்
145Shares

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள அமைப்புகளுக்கு வழங்கப்படும் கொந்துராத்து (ஒப்பந்த) வேலைகள் உப கொந்துராத்து காரர்களுக்கு வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த அமைப்பு கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் அபிவிருத்தி சங்கங்கள், சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புகள், மீனவ சங்கங்கள், முதியோர் சங்கம், விளையாட்டுக்கழகங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், விவசாய அமைப்புகளுக்கு பிரதேச செயலாளரினால் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிராம மட்ட அபிவிருத்தியை இலக்காக கொண்டு கிராம மட்ட அமைப்புகளுக்கு கொந்துராத்துகளை வழங்குகின்ற நடைமுறையிலிருந்து வருகின்றது.

எனினும் பெரும்பாலான கிராம மட்ட அமைப்புகள் தங்களுக்கு வழங்கப்படும் கொந்துராத்துகளை இன்னுமொரு உபகொந்துராத்துக்கு வழங்கிவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் தனியொருவருக்கு செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

பல மில்லியன் ரூபா கொந்துராத்து வேலைகளைசெய்யும் கிராம மட்ட அமைப்புகளின் கூரைகள் மழை காலங்களில் ஒழுக்கு நிறைந்ததாகவும் மின்சார வசதிகள் இல்லாத நிலையிலும் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையிலும் உரிய பாதுகாப்பு வேலிகளும் கதவுகள் இல்லாத நிலையிலும் காணப்படுகின்றமை கவலைக்குரியதாகவுள்ளது.

இதனடிப்படையில் இந்த ஆண்டு தொடக்கம் கொந்துராத்து வேலைகளைச்செய்யும் அமைப்புகள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.

கொந்துராத்து கிராம மட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும் போது அந்த கொந்துராத்துகள் உபகொந்துராத்துக்கு வழங்கப்படக்கூடாது. அவ்வாறு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த அமைப்பு கறுப்பு பட்டிலுக்குள் உள்வாங்கப்படும்.

அத்துடன் கொந்துராத்து தொடர்பான அனைத்து கொள்வனவு, கொடுப்பனவுகளுக்கான பற்றுச்சீட்டுகள் உரிய பதவிநிலை உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் மக்களின் பங்களிப்பு தொடர்பான விடயங்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள 05 வீத இலாப பங்கிற்கு மேலதிகமாக 02 தொடக்கம் 05 வீதமான இலாபத்தொகை குறிப்பிட்ட நிறுவத்தினுடைய கட்டுமான அபிவிருத்திகளுக்காகவோ, கிராம மக்களின் வறுமையொழிப்பு பணிகளுக்காகவோ, உரிய கண்காணிப்பின் கீழ் பயன்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கைகள் தனியார் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பிரதேச செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.