மூதூரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மீளாய்வு நடவடிக்கையின் மூலம் 2019ஆம் ஆண்டில் தகுதியானவர்களுக்கு சமுர்த்தி முத்திரைகள் வழங்க முடியும் என மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி முத்திரைகள் பெறுகின்ற பயனாளிகள் தொடர்பான மீளாய்வு நடவடிக்கை குறித்து நேற்று மாலை அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொருத்தமற்றவர்கள் சமுர்த்தி பயனாளியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொருத்தமானவர்கள் சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்படவில்லை எனவும் மூதூர் பிரதேச செயலாளரிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய பிரதேச செயலாளர் விடுத்துள்ள பணிப்புரைக்கமைய, கடந்த இரண்டு வாரங்களாக மூதூரில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மீளாய்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மீளாய்வு நடவடிக்கைகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் 2019ஆம் ஆண்டிற்கான சமுர்த்தி முத்திரைகள் வழங்கும்போது தகுதியுடையவர்களுக்கு சமுர்த்தி முத்திரைகள் வழங்க முடியும் என மூதூர் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வுக்காக பொதுமக்களுடைய வீடுகளுக்கு வருகின்ற குழுவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு மூதூர் பிரதேச செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.