நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளியிட வேண்டும் என அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரச பாடசாலைகளுக்கு 3850 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக ஜனவரி மாதம் 7ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
பெயர்பட்டியலானது வெளியீடு செய்து கடந்த 8 மாதங்களை கடந்திருந்த நிலையில் நியமனமானது வழங்கப்படாமல் இழுபறிநிலையை கொண்டு காணப்பட்டதால் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக நியமனத்தை வழங்க மத்திய அரசு முன்வந்திருந்தது.
கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிடப்பட்டிருந்த நியமன பெயர்பட்டியலானது அனைத்து மாகாணங்களிலும் வெளியிடப்படாமல் குறித்த சில மாகாணங்களே வெளியிட்டிருந்தன.
3850 பேர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தும் இன்று வரை முழுமையான பெயர் பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது.
இதனால் இந் நியமனத்தில் தங்களுடைய பெயரும் வெளிவரும் என காத்திருப்போர் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 3850 பேரின் பெயர்பட்டியலையும் கல்வியமைச்சானது தங்களது வலைத்தளத்தில் அல்லது மாகாண ரீதியாக வெளியீடு செய்ய வேண்டும். அவ்வாறு வெளியீடு செய்வதன் மூலம் இந் நியமனத்தில் பெயர்கள் உள்ளடங்கப்பட்டோர் அவர்களின் நியமனத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கமானது 3850 நியமனத்திற்கான முழுமையான பெயர் பட்டியலை வெளியீடு செய்ய வேண்டும் என மீண்டும் ஒரு முறை கோரிக்கை விடுக்கிறது. அவ்வாறு வெளியீடு செய்வதன் மூலம் நியமனத்திற்காக காத்திருப்போரின் அசெளகரியங்களை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.