சுதந்திரக் கட்சி இணையாவிட்டாலும் பொதுஜன பெரமுன வெல்லும் - பசில் ராஜபக்ச

Report Print Steephen Steephen in சமூகம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என அந்த கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுடன் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் வைத்து பசில் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச, தேர்தல் சம்பந்தமாக அரசியல் ரீதியான பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையாவிட்டால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற கருத்து சிலர் சமூகமயப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த தவறான கருத்து திருத்தப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணையாவிட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும். இந்த இரண்டு கட்சிகளும் இணைந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு படுதோல்வியை ஏற்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

எனினும் இந்த பேச்சுவார்த்தையில் பசில் ராஜபக்ச மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.