விசாரணை அதிகாரிகள் எம்மை மிரட்டிவிட்டு சென்றனர்! இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

கொழும்பிலிருந்து விசாரணைக்கென வருகை தந்த அதிகாரிகளும் எம்மை மிரட்டிவிட்டு சென்றனர் என பத்தனை, ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பத்தனை, ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களினால் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்வியற் கல்லூரியில் உள்ள பதிவாளரை கல்லூரியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போதே ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சுகாதார குறைப்பாடு காரணமாக கடந்த ஐந்தாம் திகதி கொட்டகலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களால் கல்லூரியின் சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு குறித்த பதிவாளரே காரணம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் பயிலுனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கல்வியற் கல்லூரியின் சமையல் அறையை பராமரிப்பது முதல் ஆசிரியர் பயிலுனர்களுக்கு நேர அட்டவணை படி உணவு வழங்கும் பொறுப்பு பதிவாளரை சார்ந்ததாகும்.

இவரின் கவனயீனம் காரணமாக இந்த சமையல் அறையில் சுகாதாரம் பேணப்படாமல் சீல் வைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டிய பயிலுனர்கள் இதனால் முறையான வகையில் உணவும் எமக்கு கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் கல்லூரியில் பயிற்சிபெறும் 476 மொத்த பயலுனர்களில் 75% வீத தமிழர்களும், 25% சிங்களவர்களும் கூட்டாக இணைந்தே போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இச் சமையல் அறையின் சுத்த குறைப்பாட்டினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 60 பயிலுனர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையையும் இதன்போது சுட்டிக்காட்டினார்கள்.

சுமார் இரண்டுமாத காலத்தில் சமையல் அறையின் சுகாதார குறைபாடுகளை கருத்திற் கொண்டு சீர் செய்ய நடவடிக்கை எடுக்க பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகளினால் எச்சரிக்கை விடுத்தும் சமையல் அறைக்கு பொறுப்பான பதிவாளர் கவனத்தில் கொள்ளாத நிலையில் கடந்த ஐந்தாம் திகதி சீல் வைக்கப்பட்டதாகவும் கூறினார்கள்.

அதேநேரத்தில் போசனசலைக்கு சீல் வைக்கப்பட்ட கடத்த 5ஆம் திகதி மாலை 3 மணிக்கு பின் இரவு உணவு வழங்குவதில் கல்லூரி நிர்வாகம் மற்றும் பொறுப்பு வாய்ந்த பதிவாளர் உணவு வழங்க கூடிய அக்கறை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

பயிலுனர்களுக்கு நேர அட்டவணை படி இரவு 7 மணிமுதல் 7.30 வரையே உணவு வழங்கப்படும். ஆனால் சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்ட தினத்தில் அன்றைய தினம் இரவு 9 மணிக்கு பாணும் பருப்பு கறியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின் அடுத்த நாள் காலையில் முறையாக உணவு வழங்குவார்களா என்பது தொடர்பில் கேட்டறிய பதிவாளரை சந்திக்க சென்றோம். அங்கு அவர் அறையொன்றில் கல்லூரியின் சாரதி ஒருவர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இருவருடன் மொத்தம் நால்வர் மது அருந்துவதை கவனித்து வீடியோ மற்றும் படங்களை பிடித்தோம்.

பின் கல்வியற் கல்லூரியில் இவ்வாறாக பொறுப்பு வாய்ந்தவர்கள் பயிலுனர்களை வழி நடத்துவோர் கல்லூரியின் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்பட்டது தொடர்பில் பத்தனை பொலிஸாருக்கு 119 ஊடாக தெரியப்படுத்தினோம்.

வழமையாக இங்கு சம்பவங்கள் நடந்தால் உடனடியாக வருகை தரும் பொலிஸார் வழமைக்கு மாறாக அன்று ஒரு மணி நேரம் சென்றே வந்தனர்.

இவர்களிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தோம். ஆனால் அவர்கள் மது அருந்தியவர்களை கைது செய்வதாக அழைத்து சென்றனர். அதன்போதே இவர்கள் மது அருந்தியமைக்கு ஆதாரமாக பலூன் ஊதி பரிசோதனை செய்து ஆதாரத்தை வைத்துகொள்ள வேண்டிய போதிலும் பொலிஸார் அசமந்த போக்கை கடைப்பிடித்தனர் என தெளிவாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், மறுநாளான நேற்று கொட்டகலை பிரதேச வைத்திசாலை அதிகாரியின் ஊடாக இவர்கள் மது குடித்திருக்கவில்லை என்ற சான்றுதலுடன் பிற்பகல் கல்லூரிக்கு வந்து தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாரும் அவர்களின் சார்பாக செயல்பட்டதால் நாங்கள் பொய்யர்களாக்கப்பட்டோம். இது தொடர்பில் நேற்று பதிவாளர் மற்றும் மேலும் மூவரை இடைநிறுத்த கல்லூரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் குதித்தோம்.

இதையறிந்து விஜயம் செய்த அமைச்சர் வே.ராதாகிருஷ்ணனும் போதிய ஆதாரம் இல்லை என இடங்களுக்கு அறிக்கை விட்டு சென்றுவிட்டார்.

அத்துடன் கொழும்பிலிருந்து விசாரணைக்கென வருகை தந்த அதிகாரிகளும் எம்மை மிரட்டிவிட்டு சென்றனர்.

எனவே, எமது கோரிக்கையின் அடிப்படையில் இக்கல்லூரியில் கடந்த 25 வருடமாக பதிவாளராக சேவைபுரியும் பி.டபிள்யூ. எச்.சு சீல் கருணாநிதி உள்ளிட்ட மூவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளோம் என்றனர்.

இதேநேரத்தில் தேசிய கல்வியற்கல்லூரியின் ஆணையாளர் கே.எச்.எம் பண்டார தொலைபேசில் இன்று காலை பயிலுனர்களையும், பீடாதிபதிகளையும் தொடர்பு கொண்டு இன்று மாலைக்கு முன் பயிலுனர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் குறித்த பதிவாளர் மற்றும் சகாக்களை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றுள்ள பயிலுனர்கள் உரிய தீர்வு இன்று மாலை எட்டாவிட்டால் நாளை முதல் தொடர்ந்தும் போராட்டத்தில் குதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.