தமிழ் அரசியல் கைதி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

Report Print Ashik in சமூகம்

கடந்த நான்கு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவரை கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றம் ரொக்கப் பிணையில் செல்ல இன்று அனுமதித்துள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்ப பெண் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இவ்வழக்கிற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளது.

முல்லைத்தீவு - விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான ரவீந்திரன் மதனி (வயது 31) என்ற குடும்ப பெண் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக, வெலிமடை பொலிஸாரால் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக தண்டணை கோவை சட்டத்தின் கீழ் 443, 369, 394 ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டுள்ளமை தொடர்பாகவும் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்குகளுக்கான தீர்ப்பு இன்று கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றில் வழங்கப்படும் என எதிர்பார்த்த போதும் இவ்வழக்கை விசாரித்து வந்த நீதவான் ரி.ஜே.பிரபாகரன் இடமாற்றம் பெற்றுள்ளமையால் வழக்குக்கான கோவை தீர்ப்புக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த அரசியல் கைதியான பெண்னை 25000 ரூபாய ரொக்கப் பிணையில் செல்ல நீதவான் கட்டளைப் பிறப்பித்துள்ளது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு குறித்த நபரை பிணையில் எடுப்பதற்கு நிதி உதவி வழங்கியிருந்தது.

குறித்த வழக்கு விசாரணையின் தீர்ப்புக்காக எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.