மன்னார் மைதானத்திற்கு நகர திட்டமிடல் அதிகார சபையின் பிரதி நிதிகள் திடீர் விஜயம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் நகர திட்டமிடல் அதிகார சபையின் பிரதி நிதிகள் இன்று குறித்த விளையாட்டு மைதானத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் அரம்பிக்கப்பட்டு சுமார் 5 வருடங்களை கடக்கின்ற போதும் அபிவிருத்தி பணிகள் நிறைவடையாத நிலையில் காணப்படுகின்றது.

நகர திட்டமிடல் அதிகாரசபையின் (யூ.டி.ஏ) நிதி உதவியுடன், மன்னார் நகர சபையூடாக அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

குறித்த அபிவிருத்தி திட்டத்திற்காக நகர திட்டமிடல் அதிகார சபை 40 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிதியில் விளையாட்டு மைதானத்திற்கான சுற்று மதில் அமைத்தல்,பார்வையாளர் அரங்கு அமைத்தல்,மைதானத்தை சமப்படுத்தி மண் நிறப்புதல் மற்றும் மைதானத்தில் புல் வளர்த்தல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மைதானம் சமப்படுத்தப்பட்டு,பல இலட்சம் ரூபாய் செலவில் புல் வளர்த்த போதும் புற்கள் அனைத்தும் கருகிய நிலையில் காணப்படுகின்றன.

ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறாத நிலையில் சுமார் 26 மில்லியன் ரூபாய் பணம் இது வரை அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறாத நிலையில்,14 மில்லியன் ரூபாய் பணத்திற்கான அபிவிருத்தி பணிகள் மந்த கதியில் காணப்படுகின்றது.

இந்நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் அதிகார சபையின் இயக்குனர் மற்றும் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து நிலமையை அவதானித்துள்ளனர்.

இதன் போது மைதானத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நகர முதல்வர் வருகை தந்த அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளார்.

குறித்த விளையாட்டு மைதானத்திற்கான மிகுதி அபிவிருத்தி பணிகள் அனைத்தும் எதிர் வரும் யூன் மாதத்திற்கு முன் பூர்த்தி செய்து தரப்படும் என நகர திட்டமிடல் அதிகார சபையின் பிரதிநிதிகள் மன்னார் நகர முதல்வரிடம் உறுதிமொழியினை வழங்கியுள்ளனர்.

மேலும் விளையாட்டு மைதானத்தின் நிலை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்தி வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.